நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது வெற்றிக் கணக்கை தொடங்கும் என்றும், அதற்காக தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாகக் கூறினார்.
அரசியல் நிலவரம் குறித்துப் பேசிய அவர், காயிதே மில்லத் பெயரிலான நூலகப் பணிகளை விரைந்து முடித்துத் திறக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வரும் ஜனவரி மாதம் நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நடிகர் விஜய்யின் அரசியல் தாக்கம் தேர்தல் முடிவில்தான் தெரியும் என்று கூறிய அவர், தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் பா.ஜ.க.வால் இங்கு காலூன்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
