எப்போதும் மக்கள் கூட்டத்தால் திணறும் மும்பை லோக்கல் ரயில்களில் சாதாரணப் பயணமே சவாலாக இருக்கும் நிலையில், அங்குள்ள உள்ளடக்கக் கலைஞர் ஒருவர் செய்துள்ள வினோதமான காரியம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மும்பையைச் சேர்ந்த பிரணாய் ஜோஷி என்ற இளைஞர், தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் ஒருவரின் சவாலை ஏற்று, ‘சர்ச்கேட்’ ரயில் நிலையத்திலிருந்து ‘விரார்’ வரை உள்ள சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு லோக்கல் ரயிலில் கையில் ஒரு கிளாஸ் முழுமையாகத் தண்ணீர் நிரப்பி, அதில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட கீழே சிந்தாமல் கொண்டு செல்ல முயன்றார்.

https://www.instagram.com/reel/DZKijy1NHnr/?utm_source=ig_web_button_share_sheet

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகள் முண்டியடித்து ஏறும் கூட்ட நெரிசல், சக பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் எனப் பல தடைகள் குறுக்கிட்ட போதிலும், பிரணாய் மிகக் கவனமாகத் தனது உடலை வளைத்து அந்தத் தண்ணீர் கிளாஸைப் பாதுகாத்தார். இறுதியில், ஒரு சொட்டுத் தண்ணீரும் சிந்தாமல் விரார் நிலையத்தை அடைந்து அவர் சவாலை வெற்றிகரமாக முடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த நெரிசலிலும் பதற்றப்படாமல் வீடியோ எடுத்த கேமராமேனுக்குத்தான் பாராட்டுத் தர வேண்டும் என்றும், அடுத்ததாக அரசுப் பேருந்துகளில் இது போன்ற சவால்களைச் செய்து காட்டுங்கள் என்றும் விதவிதமான கமெண்ட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.