சீனாவில் தான் வளர்த்த விஷப்பாம்பு கடித்ததில், வாலிபர் ஒருவர் தனது கட்டைவிரலை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரைப் பாதுகாக்க, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் விரலை அகற்றினர்.

பெய்ஜிங்கைச் சேர்ந்த ஹுவாங் என்ற வாலிபருக்கு சிறுவயது முதலே பாம்புகள் மீது தீராத ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளில் ஒன்றான ‘லாங்-நோஸ்டு வைப்பர்’ (Long-nosed viper) வகைப் பாம்பை அவர் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.

சமீபத்தில் அந்தப் பாம்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்குச் சரியாக உணவு உட்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதால், ஹுவாங் தனது கைகளாலேயே பாம்பிற்கு உணவளிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு அவரது வலது கை கட்டைவிரலை ஆழமாகக் கடித்தது.

பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே அதன் வீரியமிக்க விஷம் ரத்தத்தில் கலந்தது. இதனால் அவரது கட்டைவிரல் பகுதியில் இருந்த திசுக்கள் வேகமாக அழுகத் தொடங்கின (Necrosis). உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அழுகிய நிலையில் இருந்த கட்டைவிரலை மீட்க முடியவில்லை. விஷம் உடல் முழுவதும் பரவி உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, அவரது கட்டைவிரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இது குறித்துப் பேசிய ஹுவாங், “விரல் அழுகத் தொடங்கியதால், உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி அதை அகற்ற வேண்டியதாயிற்று” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

சீன நாட்டுப்புறக் கதைகளில் இந்தப் பாம்பு ‘ஐந்து அடிப் பாம்பு’ (Five-step snake) என்று அழைக்கப்படுகிறது. இதன் விஷம் எவ்வளவு வீரியமானது என்றால், இந்தப் பாம்பு கடித்த நபர் ஐந்து அடி எடுத்து வைப்பதற்குள் உயிரிழந்துவிடுவார் என்று நம்பப்படுவதால் இப்பெயர் வந்துள்ளது.

சீனாவில் சமீபகாலமாக விஷப்பாம்புகள், தேள்கள் போன்ற ஆபத்தான வினோத விலங்குகளை (Exotic pets) வளர்க்கும் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இது குறித்து ஷென்சென் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் மூத்த மருத்துவர் லியு வெய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஆபத்தான விலங்குகளை வளர்ப்பது உயிருக்கே உலை வைக்கும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இத்தகைய விலங்குகளிடம் இருந்து தள்ளியிருக்க வேண்டும்” என்றார்.கடந்த பிப்ரவரி மாதம், உலகின் மிக நச்சுத்தன்மை வாய்ந்த ‘பாய்சன் டார்ட் ஃபிராக்’ என்ற தவளையை வெளிநாட்டிலிருந்து கடத்த முயன்ற ஒருவர் ஷாங்காய் விமான நிலையத்தில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.