மீன் சாப்பிடும்போது அதன் சிறிய முட்கள் தொண்டையில் சிக்கிவிடுமோ என்ற பயம் பலருக்கும் உண்டு. குறிப்பாக குழந்தைகளுக்கு மீன் கொடுக்கும்போது குடும்பத்தினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக சீன விஞ்ஞானிகள் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சதைகளுக்குள் சிறிய முட்கள் இல்லாத புதிய வகை மீன்களை உருவாக்கியுள்ளனர். ‘CRISPR’ எனப்படும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீனின் உடலில் நுண்ணிய முட்களை உருவாக்கும் ‘Cgrunx2b’ என்ற மரபணுவை விஞ்ஞானிகள் நீக்கியுள்ளனர்.
இதன் மூலம் மீனின் தசைப்பகுதியில் வளரும் தொந்தரவான சிறிய முட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தினால் மீனின் சுவையிலோ அல்லது அதன் சத்துக்களிலோ எந்தப் பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீனின் முக்கிய முதுகெலும்பு அப்படியே இருப்பதால், அது வழக்கம்போல நீந்தவும் ஆரோக்கியமாக வளரவும் முடிகிறது; ஆனால் உணவாக உட்கொள்ளும் போது இடையூறு விளைவிக்கும் சிறிய முட்கள் மட்டும் மறைந்துவிட்டன.
இந்த அறிவியல் கண்டுபிடிப்பு மீன் பிரியர்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் எவ்வித பயமுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவையான மீன் உணவை ரசித்து உண்ண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
