திருத்தணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலைக் கண்டித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது போன்ற நாகரிகமற்ற செயல்கள் தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். மேலும், ‘ரீல்ஸ்’ எடுக்க வேண்டும் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

​தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்கள் தடம் மாறுவதைத் தடுக்கவும், இதுபோன்ற கேவலமான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.