இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மீது இதுவரை ஒரு லஞ்ச வழக்கு கூட இல்லை என்பது கட்சியின் நேர்மைக்குச் சான்று என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்புரை: இந்தியாவில் 86 ஆயிரம் நீதிமன்றங்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. ஆனால், இதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு தலைவர் மீதும் லஞ்சப் புகார் கூறப்பட்டதோ அல்லது தண்டனை வழங்கப்பட்டதோ கிடையாது. இதுவே எங்களது நூறாண்டு காலத் தூய்மையான அரசியலுக்குச் சான்றாகும். 100 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வராமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்களை யாராலும் அழிக்க முடியவில்லை. அழியாமல் இருப்பதே ஒருநாள் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்பதற்கான அடையாளம்.
இன்றைக்குத் திடீர் திடீரெனப் புதிய அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன. அந்தத் தலைவர்களின் பின்னால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். ஆனால், அவர்களால் நாட்டின் தலைவிதியை மாற்றிவிட முடியுமா? தேசபிதா மகாத்மா காந்தியால் கூட மாற்ற முடியாத இந்தியத் தலைவிதியை இவர்கள் மாற்றி விடுவார்களா? புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் தாங்கள் முதலாளித்துவப் பக்கமா அல்லது பொதுவுடைமைப் பக்கமா என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். அதனை வெளிப்படையாகச் சொல்வதிலேயே அவர்களுக்குத் தடுமாற்றம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. ஒருவேளை அதிமுக தனித்துப் போட்டியிட்டால் கூட திமுக கூட்டணிக்கு ஓரளவு போட்டியை உருவாக்க முடியும். ஆனால், அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் எங்களது வெற்றி இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
இவ்வாறு வீரபாண்டியன் பேசினார்.
