அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் அண்மையில் இணைந்தார். தற்போது அக்கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை பலவீனப்படுத்தும் பணிகளில் செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதிமுக தலைமையால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிருப்தி நிர்வாகிகளை செங்கோட்டையன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற அச்சத்தில் இருப்பவர்களிடம், தவெகவில் இணைந்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்து வருவதாகத் தெரிகிறது.

இதன் முதற்கட்டமாக சேலம் ஓமலூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இது போன்ற மாற்றங்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருவது அரசியல் நோக்கர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.