மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில், குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததால் அசுத்தமான நீரைப் பருகிய 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் அலட்சியத்தால் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சந்திக்கும் இடத்தில் கசிவு ஏற்பட்டு, மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் விஷமாக மாறியது.

இதனால் 100-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விவகாரத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட மூன்று அதிகாரிகள் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

“>

இந்தத் துயரச் சம்பவத்திற்கு மாநகராட்சி நிர்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் தெரிவித்துள்ளார். பழைய குடிநீர் குழாய்களை மாற்ற ஏற்கனவே டெண்டர் விடப்பட்டிருந்தும், பணிகள் தாமதமானதே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தற்பொழுது பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளதோடு, சேதமடைந்த குழாய்களைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற உயிரிழப்புகள் இனி நிகழாமல் தடுக்க புதிய குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.