மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தனது வளாக நேர்காணல் விளம்பரத்தில், வாடகை வீடுகள் அல்லது தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்று அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளமான x தளத்தில் வைரலாகி வரும் அந்த விண்ணப்பப் படிவத்தில், மும்பையில் சொந்த முகவரி கொண்ட ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கான இந்த வேலைவாய்ப்பில், இத்தகைய விசித்திரமான நிபந்தனை விதிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த அறிவிப்புக்கு எதிராக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். நிறுவனங்கள் வெளியூர்களில் இருந்து வரும் திறமையான மாணவர்களைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், வாடகைச் சுமை இல்லாத உள்ளூர்வாசிகளுக்கு மிகக் குறைவான ஊதியத்தை வழங்குவதற்காகவே இத்தகைய உத்திகளைக் கையாளுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 16-ன் படி, ஒருவரின் வசிப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டுவது சட்டப்படி தவறு என்றும், இது போன்ற நடைமுறைகள் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் இணையவாசிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.