அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவன டபுள்ம் – எ மாணவர்கள் 2025-ஆம் ஆண்டில் மட்டும் ‘பிளிங்கிட்’ செயலி மூலம் 60,000-க்கும் அதிகமான பிரிண்ட் அவுட்களை ஆர்டர் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் புள்ளிவிவரத்தை பிளிங்கிட் நிறுவனம் அகமதாபாத் வளாகத்திற்கு வெளியே ஒரு பெரிய விளம்பரப் பலகையில் “நீங்க அடிச்சுத் தள்ளுறீங்க போல!” என்ற நகைச்சுவையான வாசகத்துடன் வெளியிட்டுள்ளது.
ஒரு நாளைக்குச் சராசரியாக 165 பிரிண்ட் அவுட்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்த விளம்பரம், மாணவர்களின் படிப்பு ஆர்வத்தையும் தீவிரத்தையும் சுட்டிக்காட்டும் வகையில் வைரலாகி வருகிறது. குயிக் காமர்ஸ் தளமான பிளிங்கிட், தனது விளம்பர யுக்தியின் ஒரு பகுதியாகப் பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் எதை அதிகமாக ஆர்டர் செய்கிறார்கள் என்ற தரவுகளை வெளியிட்டு வருகிறது.
மேலும் முன்னதாக, ஜாம்ஷெட்பூர் எக்ஸ்.எல்.ஆர்.ஐ மாணவர்கள் ஐ.ஐ.எம் கல்கத்தா மாணவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பானங்கள் மற்றும் மிக்ஸர்களை ஆர்டர் செய்ததாகக் கிண்டல் செய்திருந்தது. ஆனால், ஐ.ஐ.எம் அகமதாபாத் மாணவர்கள் கல்வி சார்ந்த பணிகளுக்காகப் பெருமளவில் பிரிண்ட் அவுட்களைத் தேர்ந்தெடுத்துள்ளதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வித்தியாசமான விளம்பர முறை சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
