ஆவடி அருகே நெமிலிச்சேரி மேம்பாலத்திலிருந்து இணையதள கேபிள் (Internet Cable) ஒயர் மூலம் கீழே இறங்க முயன்ற ஒடிசா மாநில வாலிபர், ஒயர் அறுந்து 60 அடி உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள நெமிலிச்சேரி சந்திப்பு மேம்பாலத்தின் மீது நேற்று வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார். திடீரென அவர் மேம்பாலத்தின் ஓரத்தில் சென்ற இணையதள கேபிள் ஒயரை பிடித்துக் கொண்டு, அதன் வழியாக சினிமா பாணியில் கீழே இறங்க முயன்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகளும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என எச்சரித்துக் கூச்சலிட்டனர். ஆனால், எதையும் காதில் வாங்காத அந்த வாலிபர், ஒயரைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி கீழே இறங்கத் தொடங்கினார்.
View this post on Instagram
சுமார் 60 அடி உயரத்தில் அவர் தொங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கேபிள் ஒயர் பாரம் தாங்காமல் அறுந்தது. இதில் அந்த வாலிபர் பலத்த சத்தத்துடன் சாலையில் விழுந்தார். 60 அடி உயரத்தில் இருந்து விழுந்த போதிலும், நல்வாய்ப்பாக அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
காயமடைந்த வாலிபரை மீட்ட போலீஸார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலகொண்டமாஜி என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டு போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றாரா? அல்லது போதையில் இது போன்ற சாகச முயற்சியில் ஈடுபட்டாரா? என்பது குறித்து ஆவடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபர் ஒயரில் தொங்கியபடி கீழே விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
