மத்தியப் பிரதேச மாநிலம் நாக்தா காவல் நிலைய ஆய்வாளர் அம்ருத்லால் கவாரி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது மகன் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தந்தை ஓடிவந்து தகவல் அளித்தார். இதனைக் கேட்டவுடன் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய இளைஞரை மீட்டார்.

அந்த இளைஞரின் சுவாசம் நின்றுபோய் அவர் உயிரிழந்துவிட்டதாகக் குடும்பத்தினர் கதறிய நிலையிலும் மனம் தளராத ஆய்வாளர் அம்ருத்லால் தமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் அந்த இளைஞருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆய்வாளர் தொடர்ந்து அளித்த செயற்கை சுவாச சிகிச்சையின் பலனாக சில நிமிடங்களிலேயே அந்த இளைஞருக்கு மீண்டும் இதயத் துடிப்பு திரும்பியது.

 

உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த இளைஞரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆய்வாளரின் இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டி மாநில காவல்துறை தலைமை இயக்குநர் கைலாஷ் மக்வானா அவருக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

குற்றங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் இக்கட்டான சூழலில் மக்களின் உயிரைக் காப்பதும் காவல்துறையின் கடமை என்பதை உணர்த்திய ஆய்வாளர் அம்ருத்லாலின் இந்த வீரதீர செயல் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.