பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி, கட்சியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு தரப்பும், அவரே தற்போதும் தலைவராக நீடிப்பதாக மற்றொரு தரப்பும் கூறி வருவதால் பாமகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் மு.கார்த்தி, “திமுகவை வீட்டுக்கு அனுப்பும் வலுவான கூட்டணியில் பாமக இடம்பெறும்” என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கலுக்கு முன்னதாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் தரப்பு அண்மையில் சேலத்தில் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாஸுக்கே வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், அன்புமணி தரப்பு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. தந்தை ஒரு பக்கமும், மகன் ஒரு பக்கமும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருவதால், “மாம்பழம்” சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதும், 2026-ல் பாமக எந்தப் பக்கம் சாயும் என்பதும் தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘சஸ்பென்ஸ்’ ஆக மாறியுள்ளது.
