மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், கணவனின் கொடூர சித்திரவதையிலிருந்து தப்பித்த மாங்கிபாய் என்ற பெண்ணின் தைரியமான கதை தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்கிபாயை அவரது கணவர் 24 மணி நேரத்திற்கும் மேலாக இரும்புச் சங்கிலியால் பிணைத்து, பூட்டுப் போட்டு வீட்டில் ரகசியமாகப் பிணைக் கைதியாக அடைத்து வைத்துள்ளார்.

மேலும் இந்த கொடூரமான சூழ்நிலையிலும் தனது தன்னம்பிக்கையை இழக்காத அந்தப் பெண், எப்படியோ ஒருவழியாக இரும்புப் பூட்டை உடைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தப்பித்த மாங்கிபாய் உடனடியாக காவல் நிலையத்தை அணுகி தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்தார்.

இதனால் அவரது புகாரின் பேரில் உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், அந்த இரக்கமற்ற கணவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரும்புச் சங்கிலிகளால் கூட ஒரு பெண்ணின் மன உறுதியையும் தைரியத்தையும் கட்டிப்போட முடியாது என்பதை நிரூபித்துள்ள மாங்கிபாயின் இந்தத் துணிச்சலான செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதே வேளையில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.