நாந்தேட்டைச் சேர்ந்த ஆஞ்சல் மாமிட்வார் என்ற பெண், தனது காதலர் சக்ஷம் தாதேவின் மரணத்திற்குப் பிறகு அவரது உடலுடன் திருமணம் செய்து கொண்டு, புகுந்த வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில், ஆஞ்சல் சாக்குப்போக்கு சொல்லிவிட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவரது மாமியார் சங்கீதா தாதே குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆஞ்சல் தனது மௌனத்தைக் கலைத்து ஊடகங்கள் முன் உண்மைகளை உடைத்துள்ளார்.

மேலும் தனது காதலனின் தம்பி தன்னிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் பலமுறை முறையிட்டும் யாரும் அதை நம்பாததால், தான் போலிஸ் பாதுகாப்போடு வீட்டை விட்டு வெளியேறி தற்போது தனது தந்தை வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக ஆஞ்சல் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மாமியாரின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள ஆஞ்சல், குடும்பத்தினரின் தவறான நடத்தையே தான் வெளியேறியதற்குக் காரணம் என்று விளக்கமளித்துள்ளார். சக்ஷமின் தந்தையின் மரணம் குறித்துப் பேசிய அவர், காதலனின் பிரிவால் அவர் இறக்கவில்லை என்றும், அவர் அதிகப்படியான மதுப்பழக்கத்தால் கணையப் பாதிப்பு ஏற்பட்டு, உடல்நலக் குறைவால் தான் இறந்தார் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், காவல்துறையினருக்கு முழுமையாகத் தகவல் தெரிவித்து, அவர்கள் முன்னிலையிலேயே வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ள ஆஞ்சல், தனது மாமியார் தன் மீது அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.