உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 20 வயது மதிக்கத்தக்க இளம் நர்சிங் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது காதலன் வலுக்கட்டாயமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட கடுமையான ரத்தப்போக்கு காரணமாகவே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சிகரமான உண்மை பிரேத பரிசோதனையில் வெளிவந்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

உயிரிழந்த மாணவிக்கு சமீர் முகமது என்ற இளைஞருடன் காதல் தொடர்பு இருந்ததாகவும், அந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததால் அவளது கருவை கலைக்க சமீர் கொடுத்த கருக்குலைப்பு மாத்திரைகளால் ஏற்பட்ட ரத்தப்போக்கில்தான் அவள் இறந்தாள் என்றும் சோசியல் மீடியாவில் கடுமையான வதந்திகள் பரவி வந்தன.

ஆனால், இந்த விவகாரம் குறித்துப் பேசிய போலீஸ் கூடுதல் துணை ஆணையர் (ADCP) வருணா லிபி நாகாயிச், அந்தப் பெண்ணின் உடலில் ஏற்பட்ட கடுமையான ரத்தப்போக்கின் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியால்தான் மரணம் நிகழ்ந்துள்ளது என்பதை மருத்துவ அறிக்கையை சுட்டிக்காட்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பெண்ணிடம் சமீர் முகமது மிகக் கொடூரமான முறையில் வலுக்கட்டாயமாகப் பாலியல் உறவு கொள்ள முயன்றதால், அவளது ரகசிய உறுப்பில் ஏற்பட்ட பலத்த காயமே இந்தத் தொடர் ரத்தப்போக்கிற்கும், அதன் மூலம் ஏற்பட்ட மரணத்திற்கும் முக்கியக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகளைக் காணாமல் தவித்த தந்தையின் புகாரின் பேரில் முதலில் கொலை வழக்காகப் பதிவு செய்த போலீசார், தற்பொழுது பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அதனைப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றமல்லாத மனித உயிரிழப்பை ஏற்படுத்துதல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் மாற்றியுள்ளனர்.

கொடூரக் குற்றத்தைச் செய்துவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காகத் தந்திரமாக அந்தப் பெண்ணின் செல்போனையும் ஒளித்து வைத்த குற்றவாளி சமீர் முகமது தற்பொழுது கைது செய்யப்பட்டுப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த பயங்கர செய்தி சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.