விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களில் சட்டவிரோதமாகப் பொதுமக்களை மணி கணக்கில் சிறைபிடித்து வைக்கும் காவல்துறையினரின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்ட நடைமுறைகள் குறித்து இந்திய சட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.

மேலும் புதிய பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி, முறையான கைது ஆவணப் பதிவுகள் இன்றி ஒருவரை காவல் நிலையத்தில் அடைத்து வைப்பது சட்டவிரோதமாகும். ஒருவரை விசாரணைக்காக அழைத்து வரும்போதே அதன் விவரங்களை காவல் நிலையத்தின் பொது நாா்குறிப்பில் உடனடியாகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபரை பயண நேரத்தைத் தவிர்த்து 24 மணி நேரத்திற்குள் நீதிமன்ற நடுவர்  முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது காவல்துறையினரை நடுங்கச் செய்யும் மிக முக்கியமான சட்ட விதியாகும். காவல்துறையின் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க இன்னும் சில முக்கிய உரிமைகளும் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் காவல் நிலையத்திற்கு ஒருவரைக் கொண்டு வந்தவுடன் அவருடைய பெயர், தேதி மற்றும் கைது செய்யப்பட்ட துல்லியமான நேரம் ஆகியவற்றை ‘கைது குறிப்பாணையில்’ பதிவு செய்து, அதில் சாட்சி மற்றும் கைது செய்யப்பட்டவரின் கையெழுத்தைப் பெற வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

அதேபோல், நபரைக் காவலில் எடுத்த 2 மணி நேரத்திற்குள் அவரது குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன், காவலில் வைக்கப்பட்டுள்ள நபருக்குத் தனக்குப் பிடித்தமான வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு சட்ட ஆலோசனைப் பெறுவதற்கும் முழு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.