திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறை அருகே இரண்டு அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பு ஒன்று தஞ்சம் புகுந்தது. இதனைப் பார்த்த துப்புரவுப் பணியாளர்கள் அச்சமடைந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடையே பீதியை ஏற்படுத்திய அந்தப் பாம்பை இடுக்கி மூலம் லாவகமாகப் பிடித்துச் சென்றனர். இதேபோல் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பாம்புகளின் ஊடுருவல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டகந்தூர் கிராமத்தில், விவசாயி மனோகரன் என்பவரது நிலத்தில் குருவி ஒன்றை விழுங்கிய நிலையில் சுமார் ஆறு அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு பதுங்கியிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்ட அந்தப் பாம்பு காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. முன்னதாக ஆம்பூரில் முனியம்மாள் என்ற பெண்மணியின் வீட்டிற்குள் ஏழு அடி நீள நாகப்பாம்பு புகுந்து மூன்று நாட்கள் அங்கேயே தங்கியிருந்த சம்பவமும், வனத்துறையினர் பிடிப்பதற்கு முன்பு அந்தப் பாம்பிற்கு அவர் கற்பூரம் ஏற்றி வழிபட்டதும் குறிப்பிடத்தக்கது.