சென்னை போரூரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைத் தலைமுடியைப் பிடித்து சுவரில் முட்டிப் படுகொலை செய்த கணவரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை போரூர், ஆர்.ஈ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (40). கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கு, ரோசி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சத்யாவிற்குத் தனது மனைவியின் நடத்தையில் நீண்ட நாட்களாகச் சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 24-ஆம் தேதி இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த சத்யா, மீண்டும் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவர், ரோசியைச் சரமாரியாகத் தாக்கியதுடன், அவரது தலைமுடியைப் பிடித்து சுவரில் பலமுறை பலமாக மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரோசி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி உயிரிழந்ததை உணர்ந்ததும் அதிர்ச்சியடைந்த சத்யா, அங்கிருந்து தப்பியோடித் தலைமறைவானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், ரோசியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தனிப்படை போலீஸார், தலைமறைவாக இருந்த சத்யாவைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பிடிபட்ட சத்யாவைக் கைது செய்த போலீஸார், அவரைப் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.