சின்னத்திரை நடிகை நந்தினியின் தற்கொலை அவரது குடும்பத்தினரிடையே மட்டுமின்றி திரையுலகினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரது தாய் பசவராஜேஸ்வரி கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் தங்கியிருந்து கெளரி சீரியலில் நடித்து வந்த நந்தினிக்கு முன்கோபம் அதிகம் என்றும், அந்த அவசர குணத்தினால் அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துவிட்டதாகவும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு கருணை அடிப்படையில் கிடைக்கவிருந்த அரசு வேலையை ஏற்கும்படி குடும்பத்தினர் நந்தினிக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், தனது மகளின் நடிப்பு ஆர்வத்திற்கு எப்போதும் தடையாக இருந்ததில்லை என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.
தற்கொலைக்கு யாரும் தூண்டவில்லை என்று கூறியுள்ள நந்தினியின் தாய், கடந்த சில நாட்களாக அவர் குடும்பத்தினருடன் சரிவரப் பேசாமல் இருந்ததாகவும், ஊடகங்கள் இது தொடர்பாகத் தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நந்தினி தற்கொலை செய்துகொண்ட அன்று காலை பத்து மணி வரை சாதாரண நிலையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், குறுகிய நேர இடைவெளியில் அவர் இத்தகைய முடிவை எடுத்தது தங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் புலம்பியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரு திறமையான நடிகையின் அகால மரணம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
