உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வழக்கறிஞர்களுக்குப் புதிய அதிரடி உத்தரவுகளை நீதிமன்றப் பதிவாளர் பிறப்பித்துள்ளார். இனி ஒரு வழக்கறிஞர் தான் வாதாடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார் என்பதை, அந்த வழக்கின் விசாரணைக்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இந்தத் திட்டம் வழக்குகளைத் திட்டமிட்டபடி நடத்தி முடிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​மேலும், வாதத்தின் முழு விவரத்தையும் பக்கம் பக்கமாக அடுக்காமல், அதன் சுருக்கத்தை வெறும் 5 பக்கங்களுக்கு மிகாமல் 3 நாட்களுக்கு முன்னதாகவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் சுமார் 91,677 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை விரைவாக விசாரித்துத் தீர்வு காண்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.