திருத்தணியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “புதியக் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுகவின் பலம் தெரியாமல் பேசுகிறார்கள்” என்று விமர்சித்தார். இந்த கருத்து, தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விஜய்யை கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமியும் அதே வரிசையில் இணைந்திருப்பது, அதிமுக – தவெக இடையிலான அரசியல் உறவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.
கரூர் விவகாரத்திற்கு பிறகு தவெகுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிமுக எடுத்ததாகவும், சட்டப்பேரவையிலேயே எடப்பாடி பழனிசாமி தவெகுக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்பட்டது. இதனால், அதிமுக – தவெக கூட்டணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது அரசியல் சூழலை மாற்றியது.
அதேபோல், அக்டோபர் மாத இறுதியில் அதிமுக – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும், தவெக அதிமுக கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் தொடர்ந்தது. ஆனால் இதுவரை விஜய் அதிமுக கூட்டணிக்குள் வருவது குறித்து சூசகமாகக் கூட கருத்து தெரிவிக்காதது, அதிமுக தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம், விஜய் தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை முன்வைத்து பேசுவதுடன், திமுகவை “தீய சக்தி” என விமர்சித்து வருவதால், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை கவர முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களை ஈர்ப்பதில் ஏற்கனவே சிரமம் சந்தித்து வரும் அதிமுகவுக்கு, விஜயின் அரசியல் வருகை பெரிய சவாலாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமையை அதிமுக தாமதமாகவே உணர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், நேற்று காலை செல்லூர் ராஜூ, “அதிமுக களத்தில் இல்லை என்று கூறும் விஜய்க்கு நாவடக்கம் தேவை. நயன்தாராவுக்கு கூட கூட்டம் கூடும்” என்று கடுமையாக விமர்சித்தார். முன்பே கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தாலும், செல்லூர் ராஜூவின் கருத்து அதிக கவனம் பெற்றது.
மதுரையில் தவெகின் எழுச்சியும், அதிமுக இளைஞர்கள் தவெக பக்கம் செல்வதும் அரசியல் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில், செல்லூர் ராஜூவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால், இனி அதிமுக தரப்பில் விஜயை நோக்கிய விமர்சனங்கள் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை திமுகவை மட்டுமே அரசியல் களத்தில் எதிர்கொண்டு வந்த விஜய், இனி அதிமுகவின் விமர்சனங்களையும் சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
