ஈரோடு பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்று பேசியதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்திற்குப் பூமிபூஜை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வானத்தில் ஒரே ஒரு சந்திரன் இருப்பது போல, பூமியில் ஒரே ஒரு ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) தான்; அவரைப் போல எல்லோரும் ஆகிவிட முடியாது” என்று விஜய்யைச் சாடினார். நடிகர்களைப் பார்க்கக் கூட்டம் கூடுவது இயல்பு என்றும், விஜய்யை விட வடிவேலு அல்லது நயன்தாராவுக்கு இன்னும் அதிகமான கூட்டம் கூடும் என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழக அரசியலில் ஆலமரமாக விளங்கும் அதிமுகவை, நேற்று கட்சி தொடங்கிய விஜய் விமர்சிப்பது வேடிக்கையானது என்றும், அதிமுக களத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
“அதிமுக தலைமைக்கழகத்தில் விருப்ப மனு வாங்கும் இடத்திற்கு வந்து பார்த்தால் யார் களத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியும்” என்று குறிப்பிட்ட அவர், விஜய் மற்ற கட்சிகளை விமர்சிக்கும்போது நாவை அடக்கிப் பேச வேண்டும் என்று எச்சரித்தார். ஏற்கனவே கட்சி தொடங்கிய நடிகர்களான சிவாஜி கணேசன் முதல் கமல்ஹாசன் வரை பலரின் நிலையை விஜய் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் செல்வாக்கு என்பது வெறும் கூட்டத்தால் மட்டும் வருவதில்லை என்றும் செல்லூர் ராஜு தனது பேட்டியில் அழுத்தமாகத் தெரிவித்தார்.
