வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினார்.

தி.மு.க. அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகம் செய்துவிட்டதாகவும், நெல் மற்றும் கரும்புக்கு அறிவித்த விலையை வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக வேதனை தெரிவித்தார்.

தி.மு.க.வினர் போதைப்பொருள் விற்பனைக்குத் துணையாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தினசரி நடப்பதாகவும் விமர்சித்தார். தற்போதைய அரசை நம்பிப் பயனில்லை என்றும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்தப் பிரசாரத்தில் கேட்டுக்கொண்டார்.