தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தரவுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2010-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் கடன் சுமை தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது;

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது” எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மாநிலங்களை விடவும் தமிழகத்தில் தான் நிலுவையில் உள்ள கடன் தொகை மிக அதிகமாக இருப்பதாகவும், இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் காரணியாக மாறக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அதிரடியாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களுக்கான செலவுகளால் தமிழகத்தின் கடன் சுமார் ரூ.10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்டிச் சுமையைப் பொறுத்தவரை பஞ்சாப், ஹரியானாவுக்கு அடுத்தபடியாகத் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகப் பிரவீன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை விட இப்போது தமிழகத்தின் கடன்/மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் மிக அதிகமாக இருப்பதாகவும், நிதி மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.