நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புகழ்பெற்ற புக்கட் ஜலீல் தேசிய மைதானத்தில் படுஜோராக நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், வெளிநாட்டில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் தமிழகம் மற்றும் மலேசியாவிலிருந்து சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். இவ்விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா, நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேடையில் தந்தை எஸ்.ஏ.சி உணர்ச்சிப்பொங்க பேசி முடித்ததும், சுமார் 100 மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்த விஜய், மின்னல் வேகத்தில் ஓடி வந்து தன் தந்தையை கட்டித்தழுவிய நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வந்தன. ஆனால், மலேசிய மண்ணில் ஒட்டுமொத்த ரசிகர்கள் முன்னிலையில் தந்தை மீது பாச மழையைப் பொழிந்ததன் மூலம், தங்களுக்குள் எந்தவித மனஸ்தாபமும் இல்லை என்பதை விஜய் சூசகமாக உணர்த்தியுள்ளார்.
50 வயதிலும் மேடையை நோக்கி விஜய் ஓடி வந்த அந்த வேகம், “இவர் இன்றும் மீசை வைத்த குழந்தையாகவே இருக்கிறார்” என அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்த பாசப் போராட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
