தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2023 வரை 28 மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அதிமுக சட்டப்பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன் லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ட்ரோன் மற்றும் ஜிபிஎஸ் (GPS) தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட 4.90 ஹெக்டேருக்குப் பதிலாக 987.01 ஹெக்டேர் பரப்பளவில் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அரசு கணக்கில் வெறும் ரூ.36.45 கோடி மட்டுமே வருமானம் காட்டப்பட்ட நிலையில், உண்மையில் ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மெகா ஊழலில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துறையின் முதன்மைப் பொறியாளர் மற்றும் சில தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அதிமுக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.

“அனுமதிக்கப்பட்ட அளவை விட 21 மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய வேண்டும் எனவும், தாமதம் செய்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிமுக எச்சரித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சி அமைச்சர் மீது அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகார் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.