தஞ்சாவூர் அய்யம்பேட்டை – கட்டிமேடு காலனி பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலாஜி (26), கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு அங்கேயே தங்கியிருந்தார்.

அந்த பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தரப்பில் கோயிலாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையறிந்த அவர் தலைமறைவாகி செல்போன் பயன்படுத்தாமல் இருந்ததால், கடந்த இரண்டு மாதங்களாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் பாலாஜி தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து, கோயிலாண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமித்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தஞ்சாவூருக்கு சென்று, அவரது வீட்டை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை கோழிக்கோட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி மீது தஞ்சாவூரில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றிலிருந்து தப்பிக்கவே கேரளாவில் மறைந்திருந்த போது சிறுமியுடன் பழகி இந்த கொடூர குற்றத்தைச் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.