பெங்களூரு தேவனஹள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், மகேந்திரா என்ற இளைஞரை நிறுத்தியுள்ளார்.

விதிமீறலுக்காகச் சலான் வழங்கப்பட்ட பின்னரும், அந்த அதிகாரி மகேந்திராவின் பைக் சாவியைப் பிடுங்கிக்கொண்டு, நடுரோட்டில் அவரை அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது.

“நான் சொன்ன அபராதத்தை நீ கட்டித்தான் ஆக வேண்டும், என்னை மீறி உன்னால் இங்கிருந்து போக முடியாது” என அந்த அதிகாரி மிரட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த அதிகாரி மகேந்திராவிடம் தவறான செய்கைகளைச் (Obscene gesture) செய்து மிரட்டியதுடன், சுமார் 3 மணி நேரம் அவரை அங்கேயே காக்க வைத்துள்ளார்.

பின்னர், அவரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, 3,000 ரூபாய் அபராதம் கட்டினால் மட்டுமே சாவியைத் தருவேன் என வற்புறுத்தியுள்ளார். வேறு வழியின்றி அந்த இளைஞர் பணத்தைச் செலுத்திவிட்டு, தனது குமுறலை ட்விட்டரில் (X) பதிவிட்டுள்ளார்.

போலீஸாரின் இந்த அத்துமீறல் குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சீருடையில் இருந்துகொண்டு பொதுமக்களிடம் இவ்வளவு அநாகரீகமாக நடந்துகொள்ளலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.