2020 ஜூன் 15 ஆம் தேதி, லடாக்கின் எல்லைப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம், இந்தியா–சீனா உறவில் ஆழமான விரிசலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே இராணுவம், அரசியல் மற்றும் தூதரக ரீதியில் நீடித்த பதற்றம் நிலவி வந்தது.
இந்த பின்னணியில், 2024 அக்டோபரில் ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். லடாக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ரோந்து பணிகளை மீண்டும் தொடங்குவது, தத்தமது படைகளை தங்களின் எல்லைக்குள் பின்வாங்கச் செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் அப்போது எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.
அதே நேரத்தில், 2025 ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றிருந்தார். அங்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடந்த சந்திப்பில் சில அளவிலான உறுதியான முடிவுகள் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 2018 க்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்றது இதுவே முதல் முறையாகும்.
இந்த பேச்சுவார்த்தைகளின் நேரடி விளைவாக, எல்லை மோதல் மற்றும் கொரோனா காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா–சீனா நேரடி விமான சேவை கடந்த அக்டோபரில் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 26 அன்று, இண்டிகோ விமான நிறுவனம் கொல்கத்தா–குவாங்சூ இடையே தனது சேவையை ஆரம்பித்தது. மேலும், லிபுலேக், நாது லா போன்ற முக்கிய கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியா–சீனா நெருக்கத்திற்கு முக்கிய காரணமாக, அமெரிக்க அதிபர் விதித்த இந்திய பொருட்களுக்கான 50 சதவீத வரி குறிப்பிடப்படுகிறது. டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியா மற்றும் சீனாவை, தங்களுக்குள் வர்த்தக உறவுகளை மீளாய்வு செய்யும் நிலைக்கு தள்ளியதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்த சந்திப்புகள் இந்தியா–சீனா உறவை முழுமையான நட்பாக மாற்றவில்லை. பொருளாதாரத் தேவைகள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய ஒற்றுமை ஆகிய காரணங்களுக்காக மட்டுமே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2024 இல் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தத்தமது படைகள் சில பகுதிகளில் பின்வாங்கப்பட்டாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) அருகே பல இடங்களில் பதற்றம் முழுமையாக தணியவில்லை.
இதற்கிடையே, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே சீனா தனது பகுதிகளில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் சீனா வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை கட்டி வருவதாக கடந்த அக்டோபரில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. இந்த கட்டுமானம், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தங்களுக்குச் சொந்தமானது என சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இந்திய பகுதிகளுக்கு சீனப் பெயர்களை சூட்டுவதும், வரைபடங்களை வெளியிடுவதும் தொடர்கிறது. 2025 மே மாதத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை அறிவித்தது. இதனை இந்தியா கடுமையாகக் கண்டித்து, “பெயர்களை மாற்றுவதால் உண்மை மாறாது; அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” என திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்த விவகாரத்தின் உச்சமாக, கடந்த மாதம் லண்டனில் இருந்து ஜப்பான் செல்ல இணைப்பு விமானம் ஏறுவதற்காக ஷாங்காய் விமான நிலையத்தில் காத்திருந்த, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவரை சீன அதிகாரிகள் 18 மணி நேரம் தடுத்து வைத்தனர். அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் பகுதி என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக் கூறிய அதிகாரிகள், சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கூறி அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்ட அந்த பெண், சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் தலையீட்டுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்குப் பின்னரும், அருணாச்சலப் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இந்தியா–சீனா இடையிலான வர்த்தகம் 127.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால், இதில் இந்தியாவுக்கு பெரும் சவால் உள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 99.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மின்னணுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களுக்காக சீனாவை இந்தியா அதிக அளவில் நம்பியிருப்பது இந்தத் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒருபுறம் நட்பு முகம் காட்டும் சீனா, மறுபுறம் தனது மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை முன்னிறுத்தி செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால், “மூலோபாய கூட்டாண்மை”, “பிராந்திய ஸ்திரத்தன்மை”, “உலகளாவிய தெற்கு” போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால், 2025 ஆம் ஆண்டில் இந்தியா–சீனா உறவு பேச்சுவார்த்தைகளில் இணக்கமாகத் தோன்றினாலும், நடைமுறையில் அதற்கு நேர்மாறான நிலையே தொடர்வதாகவே பார்க்கப்படுகிறது.
