வனப்பகுதிகளில் வாழும் விலங்குகள் அவ்வப்போது மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்குள் புகுந்து அச்சுறுத்துவது வழக்கம் என்றாலும் உணவகத்திற்குள் நுழைந்து வாடிக்கையாளர் ஒருவரின் மேஜைக்கே சென்று உணவைச் சுவைக்கும் உடும்பு ஒன்றின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய பல்லி இனத்தைச் சேர்ந்த இந்த ராட்சத உடும்பு எதற்கும் அஞ்சாமல் உணவகத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஒருவரின் தட்டில் வாய் வைத்து உணவை உண்ணத் தொடங்குவது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

அங்கிருந்தவர்கள் அதன் வாலைப் பிடித்து இழுத்த போதிலும் அது அசராமல் தொடர்ந்து உணவுக்காக அங்குமிங்கும் உலவி வருவதை இந்த பதினெட்டு விநாடி காணொளியில் காண முடிகிறது. சமூக வலைதளங்களில் பல மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகள் அந்த உடும்பின் துணிச்சலைப் பாராட்டுவதுடன் வனவிலங்குகள் மனிதர்களிடம் காட்டும் இத்தகைய அணுக்கம் ஆச்சரியமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.