தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த சீனு (வயது 23) என்ற இளைஞர், கிறிஸ்துமஸ் பண்டிகை கேரல் ஊர்வலத்தில் கலந்துகொண்ட உற்சாகத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றுள்ளார்.
சத்யாநகர் உப்பளப் பகுதியில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்துள்ளது.
போதை தலைக்கேறிய நிலையில் ஆத்திரமடைந்த நண்பர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சீனுவைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சீனு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரக் கொலை குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சீனுவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையைத் தீவிரப்படுத்திய இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீஸார், கொலையில் தொடர்புடைய முகேஷ் (20) மற்றும் ஆகாஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், இவர்களுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட 4 சிறுவர்களையும் போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
மது போதையில் ஏற்பட்ட சிறு தகராறு ஒரு இளைஞரின் உயிரைப் பறித்ததோடு, பல சிறுவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
