முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எங்கு வன்முறை நடந்தாலும் அதை பாஜகவுடன் இணைத்துப் பேசுவதை வன்மையாகக் கண்டித்தார்.

மேலும் வடமாநிலங்களில் தேவாலயங்கள் அல்லது கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் பாஜகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தேவையற்ற பழிகளை பாஜக மீது சுமத்துவது தமிழக முதலமைச்சருக்கு வாடிக்கையாகிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடியே தேவாலயங்களுக்குச் சென்று வாழ்த்து தெரிவிக்கும் சூழலில், வன்முறையை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை குறித்துப் பேசிய அவர், அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணம் என்று சாடினார்.

திமுகவில் சமூக நீதி இல்லை என்றும், வாரிசு அரசியலே கோலோச்சுவதாகவும் விமர்சித்த தமிழிசை, தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், அது தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தியே அமையும் என்றும் கூறினார்.

மேலும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.