சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அன்று ஒரு நாள் மட்டும் தரிசனம் செய்வோரின் எண்ணிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று ஆன்லைன் மூலம் 35,000 பேரும், நேரடியாக வந்து முன்பதிவு செய்யும் ‘ஸ்பாட் புக்கிங்’ முறையில் 2,000 பேரும் என மொத்தம் 37,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவஸ்தானம் அதிரடியாக அறிவித்துள்ளது.

​நடப்பு மண்டல பூஜை சீசனில் கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி வரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. சீசன் தொடக்கத்தில் ஏற்பட்ட அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்களின் வருகை முறைப்படுத்தப்பட்டது. சனிக்கிழமை பகல் 12 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெற உள்ளதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தித் தரிசனத்தை எளிதாக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.