பெங்களூருவில் செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் ஒரு நபர், அங்குள்ள செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் தனது அலைபேசியை ரகசியமாக மறைத்து வைத்து படம்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் செவிலியர் ஒருவர் தற்செயலாக அந்த அலைபேசியைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்ட அந்த ஊழியரை கைது செய்தனர். விசாரணையில், அவர் நீண்ட நாட்களாக இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு, அதில் உள்ள வீடியோக்கள் குறித்து தடயவியல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனை போன்ற பாதுகாப்பு அதிகம் தேவைப்படும் இடங்களில் இத்தகைய அத்துமீறல் நடந்தது ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.