கேரள மாநிலம் எர்ணாகுளம்–புனே இடையே இயக்கப்படும் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று அதிகாலை கண்ணூர் அருகே தலைச்சேரி–மாகி இடையேயான தண்டவாளப் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது தண்டவாள ஓரத்தில் நின்றிருந்த 2 பேர், ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கை காட்டினர். இதைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர், ஏதோ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக கருதி உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

ரெயில் நின்றதும் கீழிறங்கி விசாரித்தபோது, ரெயிலை நிறுத்தியவர்கள் சிறுவர்கள் என்பதும், செல்போனில் ‘ரில்ஸ்’ வீடியோ பதிவு செய்வதற்காகவே சிவப்பு விளக்கு காட்டியதாக தெரிவித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து என்ஜின் டிரைவர் அளித்த புகாரின் பேரில், கண்ணூர் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்த போலீசார், அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தால் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.