தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டப்பிடாரம் குறுக்கு சாலை அருகே உள்ள பாலம் பகுதியில் அவர்கள் நடந்து சென்றபோது, தஞ்சாவூரில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மதுரை வழியாக தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கார் ஒன்று திடீரென பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் சுந்தரராணி (60), இசக்கியம்மாள் (55) மற்றும் கஸ்தூரி (55) ஆகிய மூவர் தூக்கி வீசப்பட்டு, உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மணியாச்சி சரக துணை காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் தஞ்சாவூரைச் சேர்ந்த ராம் பிரசாத் (32) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
