நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று (26ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. பணவீக்கம் மற்றும் ரயில்வே பராமரிப்புச் செலவுகள் அதிகரித்ததை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு காசு வீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், அந்தியோதியா, வந்தே மெட்ரோ, அம்ரித் பாரத் உள்ளிட்ட ரெயில்களிலும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு பழைய கட்டணமே பொருந்தும் என்றும், இன்று முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புதிய கட்டணம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அன்றாட செலவுகள் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டு வரும் பொதுமக்களுக்கு இந்த ரெயில் கட்டண உயர்வு மேலும் ஒரு கூடுதல் சுமையாக பார்க்கப்படுகிறது.