ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகியான கைலி மினாக் குறித்து வானொலி நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமான மற்றும் இரட்டை அர்த்தம் தரும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ்  தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். சிட்னி நகரின் பிரபல எஃப்.எம் வானொலி தொகுப்பாளர்களான கைல் மற்றும் ஜாக்கி ஓ  ஆகியோர் நடத்திய போட்காஸ்ட் நேர்காணல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் கலந்துகொண்டார். அப்போது, பாடகி கைலி மினாக்கின் சமீபத்திய இசை ஆல்பம் மற்றும் அவரது தனிப்பட்ட உடைகள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, பிரதமர் அல்பனீஸ் தரம் தாழ்ந்த மற்றும் ஆபாசப் தொனி கொண்ட சில கருத்துக்களை நகைச்சுவை என்ற பெயரில் வெளிப்படுத்தினார்.

பிரதமரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் பாடகியின் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் பிரதமர், உலகமே வியந்து பார்க்கும் ஒரு பெண் கலைஞரைப் பற்றி இவ்வளவு அவதூறாகவும் நாகரிகமற்ற முறையிலும் பேசுவதா என்று நெட்டிசன்கள் அவரைச் சாடினர். அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் குவிந்ததை அடுத்து, தனது தவறை உணர்ந்த பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், தனது பேச்சுக்காக வருந்துவதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் தான் அப்படிப் பேசவில்லை என்றும் கூறி அதிகாரப்பூர்வமாகத் தனது பகிரங்க மன்னிப்பைத் தெரிவித்துள்ளார்.