மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை தாக்கும் பல்வேறு நோய்களுக்கு அடிப்படை காரணமாக ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் உள்ளன.
இதற்கு மாற்றாக இயற்கை வேளாண்மையை மேற்கொண்டால், விவசாயிகளின் வருமானம் குறையாது. மாறாக, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் முழுமையாக தூய்மையானதாக இருக்கும் என்றார். மேலும் அவர் பேசுகையில், இயற்கை வேளாண்மை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு, தண்ணீர் பயன்பாட்டையும் கணிசமாக குறைக்கிறது.
இதன் மூலம் மக்களை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும். நாடு முழுவதும் தற்போது சுமார் 40 லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளதாக தெரிவித்தார்.
தனது சொந்த நிலத்திலும் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருவதாக கூறிய அமித்ஷா, அதனால் உற்பத்தி குறையவில்லை; மாறாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உலகளவில் மிகப்பெரிய சந்தை உள்ளது. இந்திய விவசாயிகள் தயாரிக்கும் இயற்கை வேளாண்மை பொருட்கள் உலக சந்தையை எட்ட தேவையான முழுமையான கட்டமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
