கர்நாடக மாநிலம், பெங்களூரு மல்லசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் லிகித் சிம்ஹா. இவருக்கும்  ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாத இறுதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு, தம்பதி இருவரும் மல்லசந்திராவில் வசித்து வந்தனர். இந்நிலையில், திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், லிகித் சிம்ஹா மனைவி ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் ஐஸ்வர்யாவை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஐஸ்வர்யா தனது பெற்றோரிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை, ஐஸ்வர்யாவின் பெற்றோர் ந்து, லிகித் சிம்ஹாவிடம் சமரசம் பேசி தகராறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மாலையில் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் கணவன்–மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா, கணவர் வெளியில் சென்றிருந்த சமயத்தில், தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய லிகித் சிம்ஹா, மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர், மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஐஸ்வர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஐஸ்வர்யாவின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, லிகித் சிம்ஹாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.