பெங்களூருவின் பரபரப்பான சில்க் போர்டு சந்திப்பு அருகே, இரவு 10 மணி அளவில் இளம்பெண் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளது.

அந்தப் பெண் உயிருக்கு அஞ்சி ஓடியபோது, அங்கிருந்த அபிநவ் வாசுதேவன் என்ற இளைஞர் துணிச்சலாகத் தலையிட்டு அந்தப் பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.

குற்றவாளிகளின் அத்துமீறல்களைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த அவர், அந்த ஆதாரங்களை அந்தப் பெண்ணிடமே வழங்கிப் போலீஸாரிடம் புகார் அளிக்க உதவியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து எஸ்.ஜி.பாளையா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பெங்களூரு நகர போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குற்றவாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்;

அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளனர். ஆபத்தான நேரத்தில் வேடிக்கை பார்க்காமல் அந்தப் பெண்ணுக்கு உதவிய இளைஞர் அபிநவ்விற்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.

அதே சமயம், இதுபோன்ற நேரங்களில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை சத்தமாக வாசித்து ஆடியோவாகப் பதிவு செய்வது குற்றவாளிகளை எளிதில் பிடிக்க உதவும் எனச் சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்குக் குறிப்புகளை வழங்கி வருகின்றனர்.