திருமணம் என்ற புனிதமான பந்தத்தையே ஒரு லாபகரமான தொழிலாக மாற்றி கைவரிசை காட்டி வந்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த வாணி. ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த இவர், தனது அத்தையையே கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டு பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தியுள்ளார்.
வசதியான ஆனால் அப்பாவித்தனமான இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தனது வலையில் விழ வைத்துத் திருமணம் செய்துகொள்வார்.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் நைசாக எஸ்கேப் ஆவதையே வாணி வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுவரை இதே பாணியில் 8 பேரைத் திருமணம் செய்து ஏமாற்றிய வாணிக்கு, 9-வது திருமணத்தில் தான் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் 9-வதாக ஒருவரைத் திருமணம் செய்த வாணியின் நடவடிக்கையில் அவரது கணவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது மனைவியின் மர்மமான பேச்சு மற்றும் பின்னணி குறித்து அவர் ரகசியமாகப் போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணையில் இறங்கியதுமே, வாணியின் முந்தைய 8 திருமண மோசடிக் கதைகளும் ஒவ்வொன்றாக வெளிவந்து அதிகாரிகளையே அதிரவைத்துள்ளது.
போலீஸ் தன்னை நெருங்குவதை அறிந்த வாணியும், அவருக்குத் துணையாக இருந்த அத்தையும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இந்த பாணி மோசடி கும்பலைத் தேடி தனிப்படை போலீஸார் ஆந்திரா முழுவதும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
