அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததற்காக, ‘On Road Indian’ என்ற யூடியூப் சேனல் நடத்தும் இந்திய இளைஞர் சீனாவில் 15 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். சீனாவிற்குச் சென்ற அந்த இளைஞரிடம் குடிவரவு (Immigration) அதிகாரிகள் முதலில் சாதாரணமாகவே விசாரித்தனர். ஆனால், அவர் முன்பு பதிவிட்ட வீடியோவில் அருணாச்சல பிரதேசம் குறித்துப் பேசியது அதிகாரிகளுக்குத் தெரியவந்ததும், அவரைத் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அவரது மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

​இந்தத் தடுத்து வைப்பின் போது தனக்கு உணவோ அல்லது முறையான வசதிகளோ வழங்கப்படவில்லை என்றும், வங்கதேசத்தைச் சேர்ந்த மற்ற பயணிகளுடன் தான் தங்கவைக்கப்பட்டதாகவும் அவர் தனது வீடியோவில் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். எல்லையில் நிலவும் அரசியல் விவகாரங்கள் குறித்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது பேசுவது தனக்குச் சிக்கலை ஏற்படுத்தியதை அவர் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர் சீன விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தால் உணர்ச்சிவசப்பட்டு தான் அந்த வீடியோவை வெளியிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.