ஆப்பிரிக்க நாடான கானாவில் ” உலகம் அழியப் போகிறது” என்று ஒரு தீர்க்கதரிசி கிளப்பியுள்ள பீதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்பவர், தன்னை ஒரு இறைத்தூதராக அறிவித்துக் கொண்டு, கிழிந்த சாக்குத் துணியை ஆடையாக அணிந்து வினோதமான முறையில் காட்சியளிக்கிறார். இன்று (டிசம்பர் 25) உலகம் ஒரு பிரம்மாண்ட பெருவெள்ளத்தால் அழியப் போவதாகவும், அந்தப் பேரழிவிலிருந்து மக்களைக் காக்க இறைக்கட்டளைப்படி தான் “நோவா பேழைகளை” உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“>

இதனை நம்பி, அவருடைய சீடர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விற்று, அந்தப் பணத்தை பேழை கட்டும் பணிக்காக அவரிடம் வழங்கி வருவதோடு, தங்களின் கால்நடைகளுடன் அவரைத் தேடி குவிந்த வண்ணம் உள்ளனர்.

“>

 

சுமார் 3 ஆண்டுகள் வரை வெள்ளத்தில் மிதக்கும் வகையில் இந்த மரப் பேழைகள் கட்டப்பட்டு வருவதாகக் கூறும் எபோ நோவா, இன்று இறைவனால் அனுப்பப்படும் பெருவெள்ளம் ஒட்டுமொத்த பூமியையும் மூழ்கடிக்கும் என்று எச்சரித்துள்ளார். எனினும், “பூமியை அழிக்க இனி பெருவெள்ளம் ஏற்படாது” என்று பைபிள் உள்ளிட்ட புனித நூல்களில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், இது ஒரு திட்டமிட்ட மோசடியாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஆனால், எபோ நோவாவோ, “கடவுள் ‘நிறுத்து’ என்று சொல்லும் வரை இந்தப் பணியைத் தொடர்வேன், இறைவழிபாட்டுடன் எனக்கு ஆதரவு தாருங்கள்” என்று உருக்கமாகக் கூறி வருகிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், கானாவில் அரங்கேறி வரும் இந்த வினோத நிகழ்வு தற்போது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.