கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன் தேவாலயத்திற்கு வருகை தந்தார். அங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனைச் சேவையில் அவர் பங்கேற்று, மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.
டெல்லியிலேயே மிகப்பெரியதும், பழமையானதும் ஆகிய தேவாலயங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கதீட்ரல் தேவாலயத்தில், பிரதமர் மோடியுடன் பலரும் பிரார்த்தனைச் சேவையில் கலந்து கொண்டனர்.
பிரார்த்தனை நிகழ்வுக்குப் பின்னர், தேவாலயத்தில் எடுத்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்தார். அதில், “டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் கிறிஸ்துமஸ் காலை பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். இந்த பிரார்த்தனை அன்பு, அமைதி மற்றும் இரக்கத்தின் நித்திய செய்தியை பிரதிபலிக்கிறது. கிறிஸ்துமஸ் உணர்வு நமது சமூகத்திற்கு நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கொண்டு வரட்டும்” என அவர் பதிவிட்டிருந்தார்.
May Christmas bring renewed hope, warmth and a shared commitment to kindness.
Here are highlights from the Christmas morning service at The Cathedral Church of the Redemption. pic.twitter.com/BzvKYQ8N0H
— Narendra Modi (@narendramodi) December 25, 2025
அழகிய கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற இந்த கதீட்ரல் தேவாலயம், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது. டெல்லி முழுவதிலுமிருந்து திரளான மக்கள் இங்கு வந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
மேலும், மற்றொரு பதிவில் தேவாலயத்திற்கு பிரதமர் மோடி செல்லும் காணொளியையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், “கிறிஸ்துமஸ் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை, அன்பு மற்றும் கருணைக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை கொண்டு வரட்டும். தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை சேவையின் ஒரு காட்சி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தேவாலயத்திற்கு வருகை தந்தது இது முதல் முறை அல்ல. கோவா உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய தேவாலயங்களுக்கு அவர் ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகை நேரங்களில் வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயத்தில் பிரார்த்தனையில் அவர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
