தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் (55) என்பவர், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார்.

இந்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், கடந்த 16-ம் தேதி மணிவண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனே அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் மணிவண்ணனின் இந்தத் திடீர் மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு திரண்ட உறவினர்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியதை அடுத்து கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். இறுதியில், உறவினர்கள் தரப்பில் கோரப்பட்ட மருத்துவரும் பிரேதப் பரிசோதனைக் குழுவில் சேர்க்கப்பட்டதை அடுத்து, பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்டது. சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.