கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை வெளியிட்ட ‘தி.மு.க. பைல்ஸ்’ விவகாரம், தற்போது நீதிமன்றத்தில் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 21 நிறுவனங்கள் மூலம் ரூ. 10,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இந்தத் தகவல் தனது குடும்பத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

​இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் போது டி.ஆர்.பாலு மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இரு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் முக்கியப் பகுதியான குறுக்கு விசாரணையை வரும் ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.