சென்னை – கோவை ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த மாணவியிடம் காவலர் ஷேக் முகமது அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, துணிச்சலாகச் செயல்பட்டு அந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
பின்னர் கோவைக்கு வந்தடைந்த அந்த மாணவி, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அந்த வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்ட காவலர் ஷேக் முகமது மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவலரே இத்தகைய செயலில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
