பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழா, வருகிற ஜனவரி 9-ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாகக் கருதப்படும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, வருகிற 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு, வருகிற 30-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 24-ம் தேதி (சனிக்கிழமை) திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.